நடப்பு நிதி ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில், ஸ்கிராப் பொருட்களை விற்பனை செய்ததன் மூலம், மிகுதியான வருவாய் ஈட்டி உள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், ஸ்கிராப் பொருட்கள் விற்பனை மூலம் ஈட்டப்பட்ட வருவாயை விட, நடப்பு நிதி ஆண்டில் 28.91% கூடுதல் வருவாய் ஈட்டி உள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், கடந்த ஆறு மாதங்களில், ஸ்கிராப் பொருட்களின் விற்பனை 2582 கோடி ரூபாய் அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில், ஸ்கிராப் பொருட்களின் விற்பனை 2003 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடப்பட்டது. எனவே, இந்தியன் ரயில்வே வரலாற்றில், ஸ்கிராப் விற்பனை மூலம் ஈட்டப்பட்ட உச்சபட்ச வருவாய் நடப்பு நிதியாண்டின் வருவாய் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதி ஆண்டில், தேவையில்லாத பழைய பொருட்களை விற்பனை செய்வதன் மூலம்,சுமார் 4400 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இந்தியன் ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், 393421 மெட்ரிக் டன்கள் இரும்பு ஸ்கிராப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், 360732 மெட்ரிக் டன்கள் இரும்பு பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதுவரையில், 1751 வேகன்கள், 1421 கோச்சுகள், 97 லோகோமோட்டிவ் கள் போன்றவை நடப்பு நிதி ஆண்டில் விற்கப்பட்டுள்ளன.
மீட்டர் காஜில் இருந்து பிராட் காஜுக்கு தண்டவாளங்கள் மாற்றப்படும் பொழுது, பழைய ரயில்வே தண்டவாளங்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு செல்கின்றன. எனவே, அதனை விற்பனை செய்து வருவாய் ஈட்ட ரயில்வே துறை முடிவு செய்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, தொடர்ந்து தேவையில்லாத நிலையில் உள்ள பழைய பொருட்களை விற்பனை செய்து, அதன் மூலம் வருவாயை உயர்த்த இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. இணையதளம் வாயிலாக ஸ்கிராப் பொருட்களின் ஏலத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. மண்டல ரயில்வேயின் உயர்மட்ட குழு இதற்கான செயல்முறைகளை திட்டமிட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.