அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன், 2018 ஆம் ஆண்டு, ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாய் 63 ரூபாயாக இருந்த நிலை, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி 84.07 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த வீழ்ச்சி, இந்திய ரூபாயின் மதிப்பில் இதுவரை கண்டிராததாகும். இந்த மாற்றம், இந்திய பொருளாதாரத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால் கவலைக்குரியதாக உள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு குறைவதற்கான காரணங்கள்: இந்தியா பெரும்பாலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால், கச்சா எண்ணெய் விலை உயர்வு ரூபாயின் மதிப்பை பாதிக்கிறது. இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பு, ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பை விட அதிகமாக இருப்பது ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம். அமெரிக்காவின் வட்டி விகித உயர்வு, டாலரின் மதிப்பை அதிகரிக்கச் செய்து, ரூபாயின் மதிப்பை குறைக்கிறது. இது தவிர, அண்மைக்காலமாக சீனா போன்ற நாடுகளில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து பணத்தை எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. இது ரூபாயின் மதிப்பை பாதிக்கிறது.