சர்வதேச அளவில் பொது முடக்க சூழல் விலக்கப்பட்டிருப்பதால், விமானப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலை இந்தியாவிலும் நீடிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் மாதத்தில், உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 64.61% உயர்ந்துள்ளதாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) அறிவித்துள்ளது. “கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்தியாவின் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 10.35 மில்லியன் ஆக உள்ளது” என ஆணையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் போக்குவரத்தை தொடங்கிய ஆகாசா ஏர் விமானத்தை தவிர்த்து, பிறவற்றில், 7.66 மில்லியன் பயணிகள் பயணித்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், விமானத்தில் இருக்கைகள் நிரம்பும் விகிதம் “பேசஞ்சர் லோடு ஃபேக்டர்” என்று அழைக்கப்படுகிறது. இது, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 72.5 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், அதன் சராசரி அளவு 77.5 சதவீதமாக செப்டம்பர் மாதத்தில் உயர்ந்துள்ளது. இந்த தகவல்களை டிஜிசிஏ வெளியிட்டுள்ளது. மேலும், விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் அடிப்படையிலும் தரவுகளை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இண்டிகோ நிறுவனம் முதலிடத்திலும் விஸ்தாரா நிறுவனம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில், 57% உள்நாட்டு விமானப் போக்குவரத்து இண்டிகோ நிறுவனத்தால் நிகழ்ந்துள்ளது. இந்த விமானத்தில் 59.72 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். அதே வேளையில், விஸ்தாரா நிறுவனத்தின் சார்பில் 9.6 சதவீதம் உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிகழ்த்தப்பட்டுள்ளது. விஸ்தாரா விமான நிறுவனத்தில், 9.96 லட்சம் பயணிகள் செப்டம்பர் மாதத்தில் பயணித்துள்ளனர். விஸ்தாரா நிறுவனம் டாடா குழுமத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டாடா குழுமத்தில், விஸ்தாரா தவிர, ஏர் இந்தியா மற்றும் ஏர் ஏசியா ஆகிய விமான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. எனவே, மூன்று விமான நிறுவனங்களையும் உள்ளடக்கிய டாடா குழுமத்தின் விமானப் போக்குவரத்து, செப்டம்பர் மாதத்தில் 24.7 சதவீதமாக இருந்தது.