இந்தியா, விண்வெளியில் பிரத்தியேகமாக விண்வெளி நிலையம் அமைக்கும் திட்டத்தில் பணியாற்ற உள்ளது. இந்த திட்டம், அடுத்த 5 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளுக்குள், இந்தியாவின் பிரத்தியேக விண்வெளி நிலையத்தின் முதல் பிரிவு கட்டமைக்கப்படும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 120 முதல் 140 கிலோ மீட்டர் தொலைவில், குறைந்த பட்சம் 3 விண்வெளி வீரர்கள் தங்கும் வகையில், இந்தியா விண்வெளி நிலையத்தை கட்டமைக்க உள்ளது. அத்துடன், 2047 ஆம் ஆண்டு வரையில் இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் கழிந்து, விண்வெளி துறையில் இந்தியாவின் வளர்ச்சி எத்தகையதாக இருக்கும் என்ற அறிக்கை வெளி வந்துள்ளது. அதில் எண்ணற்ற நிலவு திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, நிலவுக்கு சுற்றுலா செல்லும் திட்டம் கவனம் பெற்றுள்ளது. இவை தவிர, ககன்யான் திட்டம், வெள்ளி கிரக ஆய்வு திட்டம், சூரியன் ஆய்வு திட்டம் ஆகியவையும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.