மாமல்லபுரத்தில் சர்வதேச அலை சறுக்குப் போட்டி நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு சர்பிங் சங்கம், இந்திய சர்பிங் சம்மேளனம் ஆகியவை இணைந்து இந்தியாவில் முதல் முறைாக சர்வதேச சர்பிங் ஒபன் போட்டி நடத்துகிறது. சர்வதேச அலை சறுக்குப் போட்டியான இந்தப் போட்டி மாமல்லபுரத்தில் ஆகஸ்டு 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது.
தலை சிறந்த தேசிய சர்பிங் சம்பியன்கள் மூலம் 2028 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதில் நாடு உறுதியாக உள்ளது. இந்த லட்சிய நோக்கத்தை நனவாக்கும் வகையில் நம் சர்பிங் வீரர்களுக்கு அதி நவீன வசதிகள், உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சிகள் வழங்கவும் சர்வதேச நிபுணர்கள் ஒத்துழைப்புடன் விளையாட்டு வீரர்களின் செயல் திறன் நிலைகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.














