கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் கியூ.ஆர்.கோடு மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனுக்கு அலங்காரம் ,சந்தன காப்பு, கன்னியா போஜனம், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு பணம் செலுத்தி வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் கோடி அர்ச்சனை, குழந்தைகளுக்கு சோறு கொடுப்பு உள்ளிட்ட வழிபாடுகள் கட்டணம் மூலம் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் இது தவிர பக்தர்கள் நன்கொடை வழங்குவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இதுவரை பக்தர்கள் நேரடியாக பணம் செலுத்தி வந்த நிலையில் செல்போன் மூலம் போன் பே, கூகுள் பே மூலம் நன்கொடை செலுத்த கியூ.ஆர். கோடு மூலம் பணம் செலுத்தும் முறை அமல்படுத்த கோரி நீண்ட நாட்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதனை ஏற்றுக்கொண்டு தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் செல்போன் வழியாக கியூ.ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி வழிபாடுகள் மற்றும் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.