ஈரானில், கடந்த வருடம் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை ‘கடவுளுக்கு எதிராக போர் தொடுத்த’ குற்றத்தின் காரணமாக ஈரான் அரசு தூக்கிலிட்டு வருகிறது. இதற்கு பல உலக நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மேலும் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து, ஈரான் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 8ம் தேதி, முகமது கராமி, சையத் முகத் என்ற 2 பேர், ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தின் போது, பாதுகாப்பு படை வீரரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். இதற்கு மனித உரிமைகள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போதைய மூவர் தூக்கு அறிவிப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில், இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 15000 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை வெளிவரவில்லை.














