ஈரானில் உள்ள 3 அணுசக்தி மையங்களை அமெரிக்கா சக்தி வாய்ந்த குண்டுகள் மூலம் தாக்கியதை அடுத்து, ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மழைபோல் வீசி பதிலடி கொடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதட்டம் அதிகரித்து, கச்சா எண்ணெய் சந்தை பரபரப்பாகியுள்ளது.
பங்கர் பஸ்டர் குண்டுகளை பயன்படுத்தி அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சேதமடைந்தன. பதிலடியாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூட நடவடிக்கை எடுத்து வருவதால், உலகளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த நீரிணை வழியாக உலகில் 20% கச்சா எண்ணெய் விநியோகம் நடைபெறுகிறது. இந்தியா கூட அதே வழியாக தினசரி எண்ணெய் இறக்குமதி செய்கிறது – சுமார் 40% அளவுக்கு. இதனால், பெட்ரோல், டீசல், தங்கம் ஆகியவற்றின் விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது.
ஆனால், தற்போது போதுமான கையிருப்பும், ரஷியாவுடன் அதிக எண்ணெய் ஒப்பந்தங்களும் இருப்பதால் இந்தியாவுக்கு உடனடி பாதிப்பு ஏற்படாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், நிலைமை நீடித்தால் விலை உயர்வுக்கு வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.