பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, பதவியில் இருந்த போது கிடைத்த பரிசுகளை அவர் தனிப்பட்ட சொத்தாக மாற்றியதாக தோஷகானா வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது அவர் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில், தோஷகானா வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு இன்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி அமீர் பரூக் மற்றும் நீதிபதி தாரிக் முகமது தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் விரைவில் ஜாமினில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்ரான் கானின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது, பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம், பாகிஸ்தானில் நடைபெற உள்ள தேர்தலில் இம்ரான் கான் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.














