தெற்கு காசாவில் உள்ள முக்கிய நகரான கான் யூனிஸை முற்றிலும் சுற்றிவளைத்து விட்டோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தெற்கு காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அங்குள்ள முக்கிய நகரங்கள் மீது குண்டுகள் வீசி வருகிறது. தரைப்படை தாக்குதலும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தெற்கு காசாவின் கான் யூனிஸை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ தளபதி பின்கேல் மேன் கூறுகையில், தெற்கு காசாவில் உள்ள முக்கிய நகரான கான் யூனிஸை முற்றிலும் சுற்றிவளைத்து விட்டோம். அந்த நகரின் மையப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே வடக்கு காசாவில் போர் நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் டாங்கிகள் கடலோர காசா பகுதி எல்லை வழியாக கான்யூனிஸ் நகருக்குள் நுழைந்து வருகிறது. அந்த நகரில் எச்சரிக்கை துண்டு பிரசுரங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதில் அவர்கள் மக்கள் வெளியே வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு இடையே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஹமாஸ் படை தலைவரை கொல்லாமல் விடமாட்டோம் என்று கூறியுள்ளார். அதோடு காசாவில் உள்ள இஸ்ரேல் பிணை கைதிகள் அனைவரையும் மீட்போம் என்றார். இதற்கிடையே காசாவில் மனிதாபிமான நிலைகள் மோசம் அடைந்து வருவது குறித்து ஐநா தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.