மத்திய காஸா பகுதியில் உள்ள பள்ளி மீது இஸ்ரேல் பீரங்கி குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 20 பேர் பலியாகினர்.
இந்த தாக்குதல், நுசைரத் அகதிகள் முகாமில் இடம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் பள்ளி மீது நேற்று நடைபெற்றது. சம்பவம் நடந்ததும், ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாக உதவிக்கு வந்தனர். அப்போது மீட்புக்குழுவினர் 20 சடலங்களை மீட்டனர். மேலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். அதே நாளில், வடக்கு காஸாவின் அல்-ஷாதி முகாமின் மேற்கில் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் இதுவரை 42,227 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.