மனிதாபிமான உதவிகள் வழங்க தெற்கு காசாவில் பகல் நேர தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
காசாவில் 9 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க தெற்கு காசாவில் பகல் நேர தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த ஞாயிறன்று இந்த அறிவிப்பு வெளியானது. தொடர் ராணுவ தாக்குதலில் காசாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர் என்று ஐநா கூறியிருந்தது. காசாவில் மனிதாபிமான உதவிகளின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உதவிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தெற்கு காசாவில் பகல் நேர தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஃபா பகுதியின் 12 கிலோமீட்டர் சாலை உட்பட தெற்கு காசாவில் பகல் நேரம் இடைக்கால போர் நிறுத்தத்தை அமல்படுத்துகிறோம். காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை இது அமலில் இருக்கும். மறு அறிவிப்பு வெளிவரும் வரை இது தொடரும். இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை கடந்து காசாவுக்குள் வரும் உதவிகள் நுழைவு வாயிலை அடையவும் சலா-ஏ-தின் நெடுஞ்சாலையில் பாதுகாப்பாக பயணிக்கவும் இந்த போர் நிறுத்தம் உதவியாக இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.