அமேசான் தோற்றுனர் ஜெப் பெசோஸ், ப்ளூ ஒரிஜின் என்ற விண்வெளி ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பாக உருவாக்கப்பட்ட ராக்கெட், கடந்த ஆண்டு தோல்வியடைந்தது. அதன் பிறகு, ஓராண்டு காலமாக எந்தவித ராக்கெட் ஏவும் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது, கடந்த செவ்வாய்க்கிழமை, ப்ளூ ஒரிஜின் நிறுவனத்தின் முதல் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 10:42 மணிக்கு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ப்ளூ ஒரிஜின் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 107 கிலோ மீட்டர் உயரம் வரை பயணித்து, சர்வதேச அளவில் வரையறுக்கப்பட்டுள்ள விண்வெளி எல்லையை வெற்றிகரமாகத் தாண்டி உள்ளது. அதன் பிறகு, பூஸ்டர் பகுதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த ராக்கெட் ஏவும் பணிகள் மொத்தமாக 10 நிமிடங்கள் 13 வினாடிகளுக்கு நடைபெற்றன. இந்த ராக்கெட் திட்டம் வெற்றியடைந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள நிறுவனம், 2024 ஆம் ஆண்டில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளது.