கோரக்கர் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 18 சித்தர்களில் ஒருவர் மட்டுமல்ல தமிழகத்தின் பல இடங்களிலும் வழிப்படப்படும் முக்கிய சித்தரும் கூட, மாமுனி அகத்தியர் மற்றும் பெருஞ் சித்தர் போகரின் அபிமான மாணவராக இருந்தவர். போகரின் பல்வேறு படைப்புகளில் கோரக்கர் குறித்து பல தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அற்புதங்கள் நிறைந்த கோவை வெள்ளியங்கிரி மலையில் பிறந்தார் கோரக்கர் தனது இளம் வயது முழுவதையும் அந்த மலையிலேயே வாழ்ந்து கழித்தார் என்று ஒரு செய்தி உள்ளது. ஆனால் கோரக்கர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று போகர் கூறுகிறார். இவர் வட இந்தியாவை சேர்ந்தவர் மராட்டியர் ஆயினும் தமிழ்நாட்டில் உள்ள சதுரகிரியை நோக்கி பயணம் செய்து போகரை தோழராகக் கொண்டார். சட்டைமுனி, கொங்கணர் இவருக்கு நெருக்கமானவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
கோரக்கர் பிறப்பை பற்றி சொல்லும் போது மச்சேந்திரர் எனப்படும் மச்சமுனி குழந்தையில்லா பெண்ணுக்கு குழந்தை வரம் பெற கொடுத்த விபூதி அந்த பெண் தூக்கி வீச சாம்பலாக்கிவிட அந்த சாம்பலில் இருந்தே கோரக்கரை உருவாக்கினார்.அந்த கோதார அடுப்பின் சாம்பலில் இருந்து வெளிப்பட்டதால், கோரக்கர் என்று பெயரிட்டு தன் சீடனாக ஏற்றுக் கொண்டு உடன் அழைத்து பல ஊர்களுகக்கும் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது.மிக கோரமான நோய்களைத் தீர்க்க மருத்துவம் கண்டதாலும் கோரக்கர் என பெயர் வந்திருக்கலாம் எனவும் குறிப்பு ஒன்று உள்ளது. மச்சமுனியுடன் கோரக்கர் சென்ற போது ஒரு ஊரில் தானமாக கொடுத்த வடை ஒன்றை மச்சமுனிக்கு கோரக்கர் கொடுக்க அதை உண்ட மச்சமுனி மறுநாளும் அந்த வடையை கேட்க, அந்த வடை செய்த பெண்மணி வீட்டுக்கு சென்று கோரக்கர் கேட்க அதற்கு அந்த பெண் விளையாட்டாக உங்கள் குரு கேட்டால் வடை கொடுக்கணுமா? உன்னிடம் உன் குரு எதை கேட்டாலும் கொடுத்து விடுவாயா என கேட்க, கோரக்கரும் ஆம் என சொல்ல அதற்கு அந்த பெண் அப்போது உன் கண்ணை கொடு வடை தருகிறேன் என சொல்ல கண்ணையே எடுத்து கொடுத்தாராம் கோரக்கர். பின் குரு பக்தியில் நெகிழ்ந்து போன அந்த பெண் சுவையான வடை சுட்டுக் கொடுத்தார்.
ஒரு கண்ணோடு அந்த வடையை எடுத்துக்கொண்டு குரு மச்சமுனியை பார்க்க சென்ற கோரக்கரின் குரு பக்தியை பார்த்து வியந்து போன மச்சமுனி மீண்டும் அவருக்கு கண்ணை வர வைத்தார். இதே போன்று மலையாள நாட்டிற்கு கோரக்கர் மச்சமுனி இருவரும் போன போது இவர்களுக்கு அங்குள்ள அரசி ஒருவர் ஒரு தங்கக்கட்டி பரிசாய் கொடுக்க வரும் வழியில் திருட்டு பயம் இருந்ததால் அதை குரு மச்சமுனிக்கு தெரியாமல் தூக்கி எறிந்து விட்டு வெறும் கல்லை வைத்துவிட்டார் கோரக்கர். இதை அறிந்து கோபமுற்ற மச்சமுனி கோரக்கரை தன் சீடனே இல்லை எனக்கூறி விலக்கிவிட்டார். இதனால் கொஞ்சமும் துவளாத கோரக்கர் தன் தவ வலிமையால் அதே இடத்தில் ஒரு தங்கமலையை உருவாக்கினார்.
கோரக்கர் குருவைப் பார்த்து தங்களுடைய பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.அறியாமையினால் தவறு இழைத்த மச்சமுனியை பிடித்திருந்த மாயை விலகியது. மனம் தெளிவு பெற்ற கோரக்கர் குரு மச்சமுனி, தன் சீடரை வெகுவாகப் பாராட்டினார். ஆயினும் கோரக்கர் குரு மச்சமுனியை பிரிந்து தனியே சென்று கடும் தவம் புரிந்து அஷ்டமா சித்திகளையும், காய சித்திகளையும் வரமாய் பெற்றார். பின்னர் சில காலம் கழித்து திருக்கையிலாயத்தை அடைந்த கோரக்கர் அங்கு அல்லமாதேவர் என்பவரை சந்தித்தார். இருவருக்கும் உடல் பற்றி தர்க்கம் வர அல்லமர் கோரக்கரை பலம்கொண்டு வெட்டினார். கோரக்கர் உடலின் மீது பட்ட வாள் ‘கிண்’ என்ற ஒலியுடன் தெரித்து அகன்றதே அன்றி அவர் உடம்பில் எந்த வித காயமும் உண்டாகவில்லை. கோரக்கரும் அல்லமரைவாள் கொண்டு வெட்டினார். அவ்வாள் காற்றை வெட்டுவது போன்று உடலினுள் புகுந்து வெளிவந்தது. தன்னைவிட மிக்க சக்தி வாய்ந்த அல்லமரை வணங்கி தன் பிழையை பொறுக்க வேண்டினார் கோரக்கர். இனியாகிலும் உடம்பிலுள்ள பற்றினை நீக்கி உனது உண்மை நிலையை அறிவாயாக என்று கூறினார் அல்லமாதேவர்.இதனைக் கேட்ட கோரக்கர் தன் உடலையே ஆன்மாவின் வடிவம் என்று எண்ணியிருந்ததை விடுத்து உண்மை நிலையை உணர்ந்தார்.
சித்தர் கோரக்கர் பல எதிர்கால நிகழ்வுகளை கூட முன்னறிவித்து அவருடைய சந்திரா ரெகாய் என்ற நூலில் எழுதியுள்ளார். அந்த நூலில்.நம் மக்கள் கடவுள் மீதான நம்பிக்கையை இழக்கும்போது போகர் மீண்டும் இம்மண்ணில் உருவமாய் பிறப்பெடுப்பார் என்றும் கூறியுள்ளாராம்.
கோரக்கர் அப்போதைய சூழலில் தாம் அறிந்த ஞானமெல்லாம் எல்லோரும் அறிய வெளிப்படையாக பாடினார். அந்த நூல்கள் தீயவர்களிடம் கிடைத்துவிடக் கூடாது என்று எண்ணிய மற்ற சித்தர்கள் கோரக்கர் எழுதிய நூல்களை எடுக்க அவருடைய ஆசிரமத்திற்கு வந்தார்கள்.இதனையறிந்த கோரக்கர், அரிசியுடன் கஞ்சாவைச் சேர்த்து அடை செய்து சித்தர்களின் கண்ணில் படும்படியாக வைத்தார். நூல்களை எடுக்க வந்த சித்தர்கள் அடையைப் பார்த்ததும் அதனை எடுத்து உண்டு மயங்கினர். அதுசமயம் முக்கியமான நூல்களை எடுத்து மறைத்து வைத்தார் கோரக்கர். அதனால் சித்தர்கள் மீண்டு எழுந்த போது அங்கிருந்த சில நூல்களை மட்டுமே எடுத்துச் சென்றார்கள்.
கோரக்கர் அருளிய நூல்கள் மொத்தம் 40 மருத்துவம்,ஜோதிடம், ஆழ்ந்து பேசும் நூல்களையும் கோரக்கர் அருளியுள்ளார். அதில் நூல்களாக இப்பொழுது கிடைப்பவை சந்திர ரேகை,கோரக்கர் நமநாசத் திறவுகோல்,கோரக்கர் ரக்ஷமேகலை கோரக்கர் சூத்திரம்,கோரக்கர் மூலிகை என 10 க்கும் மேற்பட்ட நூல்கள் இப்போதும் கிடைக்கின்றன.
கோரக்கர் இம்மண்ணில் பூத உடலோடு வாழ்ந்த காலம் மொத்தம் 880 ஆண்டுகள் 11 நாள் ஆகும். கோரக்கர் சித்தர் சமாதி அடைந்த தலங்கள் எண்ணிக்கை மிக அதிகம். 12 இடங்களில் அவை உள்ளன. பொதிகை மலை , ஆனை மலை கோரக்நாத்திடல் (பாண்டியநாடு), வடக்கு பொய்கைநல்லூர் பரூர்ப்பட்டி (தென்னார்க்காடு), சதுரகிரி
பத்மாசுரன் மலை (கர்நாடகம்),கோரக்பூர் (வடநாடு) ,பேரூர் பட்டீஸ்வரர் கோயில் ஹரித்துவார் கோரக்கர்மலை (பாகிஸ்தான்), கோர்க்காடு (புதுச்சேரி). மேலும் வடக்குப் பொய்கைநல்லூரில் ஐப்பசித் திங்கள் (பரணி) பௌர்ணமி நாளில் ஜீவ சமாதி அடைந்ததாக குறிப்பு ஒன்றும் கிடைத்துள்ளது.
கோரக்கர் வழிபாடு நேபாள நாட்டில் மிகப் பிரசித்தம். நேபாள தலைநகர் காட்மண்டுவில் கோரக்கர் ஆலயம் புகழ் பெற்றது. கூர்காங் இன மக்கள் கோரக்கர் வழி வந்தவர் என பெருமிதம் கொள்கின்றனர்.நேபாளி பணத்தில் நாணயத்தில் கோரக்கர் திருஉருவம் இடம்பெற்றுள்ளது. கோரக்கரை மானசீக குருவாக மராட்டிய சிவாஜி வழிபட்டார் எனவும் அதேபோல் கர்நாடக அருளாளர் கோராகும்பர் கோரக்கரை வழிபட்டு உயர்ந்தவர். என பல தகவல்களும் உள்ளன. சித்தர்கள் போற்றிய பெரும் சித்தர் கோரக்கர் அதனால் அவரைத் தொழுவது சித்தர் உலகையே பூஜித்து கோடி புண்ணியப்பலன் பெறுவதற்குச் சமமாகும்.