பதினெண் சித்தர்களில் கொங்கணருக்கு தனி சிறப்பு உண்டு. ஒரு சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் தான் அவர் அவதரித்தார். இவர் பிறந்ததோ கேரளத்தின் கொங்கண தேசத்தில் என்று அகத்தியர் பனிரெண்டாயிரம் நூலும் போகர் ஏழாயிரம் நூலும் கூறுகிறது. அன்றைக்கு அவை தமிழ் பேசும் மண் தான். அவர் அடிப்படையில் இரும்புக்கலம் செய்யும் ஆசாரிமார்களின் குல வழியைச் சேர்ந்தவர் ஆசாரிமார்கள், பிரம்ம தேவனையும் விஸ்வகர்மாவையும் முக்கிய கடவுளர்களாக வழிபடுபவர்கள்.
அவளின் குடும்பங்களில் தனித்தனியே குலதெய்வ வழிபாடுகளும் பிரதானமாக இருக்கும்.கொங்கணர் குடும்பத்திலோ சக்தி வழிபாடு தான் பிரதானமாக இருந்தது.கொங்கணரும் தொடக்கத்தில் மிகுந்த அம்பிகை பக்தராகத்தான் திகழ்ந்தார். தன் பெற்றோருக்கு உதவியாக கலங்கள் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தார். இவர் திருமணத்திற்குப் பிறகுதான், இவர் வாழ்வில் எல்லாமே மாறத் தொடங்கியது. கொங்கணரின் மனைவி, அதிக பேராசை கொண்டு . ‘பொன்னும் மணியும் தன் வீட்டில் கொட்டிக் கொழிக்க வேண்டும்’ என்று விரும்பினாள். அவளது எண்ணம், கொங்கணரை மிகவும் பாதித்தது. அப்போது அவர் சித்த புருஷர் ஒருவர் தங்கக்காசுகளை வரவழைத்தும், கைகளை வருடித்தந்து வாசனையை உருவாக்கியும் செய்த அற்புதங்களை பார்த்து வியந்து எப்படி அவ்வாறு செய்கிறார் என்று அறிந்துகொள்ளப் போய் தானும் ஒரு சித்தயோகியாக வேண்டும் என எண்ணி போகரின் மாணவராக மாறினார். போகரின் சிஷ்யர்களிள் இவர் வித்தியாசமானவர் என்றே சொல்லலாம்.
கொங்கணர் என்ற பெயர் இவருக்கு காரணம் ஒருமுறை இவர் தவத்தில் ஆழ்ந்திருக்கும்போது, மரக்கிளையில் இருந்த கொக்கு இவர் மேல் எச்சமிட, அதனால் இவர் தவம் கலைந்து, கோபமுடன் கொங்கணர் பார்க்க, அந்த கொக்கு அதே இடத்தில் எரிந்து சாம்பலானது . நீண்டநாள் தவத்திலிருந்து அந்த தவம் கலைந்ததால் அருகில் இருந்த வீட்டிற்கு ஆகாரம் உண்ண சென்று உணவு கேட்டார். அவ்வீட்டிலிருந்த அம்மையார் காலந்தாழ்த்தி கொங்கணருக்கு அன்னமளித்தார்.
கொங்கணர், அந்த பெண்ணையும், சினத்துடன் நோக்கினார். உடனே, அந்த பெண், ‘கொங்கணவா நான் ஒன்றும் கொக்கல்ல எரிந்து போவதற்கு’ என்று அமைதியாகப் பதில் அளித்தார். ‘என் கணவருக்கான பணிவிடையில் இருந்த போது உமது குரல் கேட்டது. ஆனால் எனது கடமையை முடிக்காமல் நான் எப்படி உமக்கு அன்னமளிக்க வரமுடியும்’ என்றார் அவர். கொங்கணவர், அந்த பெண்மணியின் ஞானதிருஷ்டியை எண்ணி வியந்தார்.
அவளுடைய கற்பின் திண்மையை மெச்சி வாழ்த்தினார். தம்முடைய சினத்தை நினைத்து வெட்கினார். பின் போகரின் கருத்துப்படி திருமாளிகைத்தேவரிடம் சென்று சமய தீட்சை, நிர்வாண தீட்சை பெற்றார் என்ற குறிப்பு ஒன்றும் போகர் ஏழாயிரத்தில் காணப்படுகிறது. தொடக்கத்தில் தவத்தால் அவருக்கு பெரிய பலன் கிடைக்கவில்லை என்று எண்ணிய கொங்கணர் காலமெல்லாம் அமர்ந்து தவம் செய்து பெறும் பயன்களை விட சில முனிவர்கள் பலன் பெற்றது போல் யாகத்தில் வேகமாக பயன் பெற்றுவிட வழி இருப்பதாக நினைத்து, தவத்தை விட்டுவிட்டு யாகம் செய்ய தொடங்கினார். ஆனாலும் அவர் வாழ்வில் செய்த அளவிற்கான தவப்பயன், கௌதம மகரிஷி வடிவில் அவரை சீர்படுத்த முயன்றது. அவர், கொங்கணர் திசை மாறுவதை உணர்ந்து அவரை எச்சரித்தார். ‘‘சித்தனாக விரும்பினால், நீ சொல்வதை சித்தம் கேட்க வேண்டும். சித்தம் சொல்வதை நீ கேட்கக் கூடாது... யாகம், ஹோமம் எல்லாம் பெரும்துன்பத்தில் இருப்பவர்கள் அருள்சக்தி பெற்று உய்வடைய பயன்படுத்தும் குறுக்கு வழிமுறைகள். உனக்கு எதற்கு அது? உபதேச மந்திரத்தால் தவம் செய்வதே உன் வரையில் உற்ற செயல்’’ _ என்று கௌதமர் கொங்கணரை ஒருமுறைக்குப் பலமுறை நேர்படுத்தினார்.
பின் தவத்தின் அருமையை உணர்ந்த கொங்கணர், பெரும் ஞானியாகி, அதன்பின் குண அடக்கம் பெற்றார். 'தனக்குள் தன்னடக்கத்தோடு சிந்திக்க ஆரம்பித்த பிறகே, அவருக்குள் ஒரு பரிபூரணத்தன்மை நிறையத் தொடங்கியது.
தன் வாழ்நாளில் கௌதமர், போகர், திருமாளிசைத் தேவர், திருமழிசையாழ்வார் என்று பல ஆன்றோர்களை சந்தித்து, அவர்களிடமிருந்து பல விதமான ஞான வளங்களை பெற்றதாகவும், தன் வாழ்வின் இறுதிக்காலத்தில் தஞ்சையில் பிரத்யேகமாக ஒரு சிவலிங்கத்தை தனது பூஜைக்கென்றே உருவாக்கி, வாழ்வின் இறுதி நொடிவரை அதை பூசை செய்து வழிபட்டு வந்ததாகவும் கொங்கணர் வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது. கொடும் சித்தர் என்றும் கொங்கணருக்கு ஒரு பெயர் உண்டு. கொடிய பாஷாண மருந்துகளை எல்லாம் தயாரித்து தானே சோதித்து பார்ப்பாராம். மிகக் கடுமையான கலைகளையும் விடா முயற்சியாக பயின்று வெற்றி கண்டவர் கொங்கணர். குருவருளே பெரிதென போற்றி வாழ்ந்தவர்.
இவரை ஆத்மார்த்தமாக வணங்கி வரூபவர்களுக்கு அவர்கள் வாழ்வில் உருவாகும் எந்த நோய்களும் நீங்கும், நஞ்சு வகைகளால் வரக்கூடிய எந்த கொடும் உபாதைகளும் நிகழாமல் பாதுகாப்படுவதுடன், அவரவர் இணைந்திருக்கும் குழுக்களில் தலைமை தாங்கும் ஆற்றலும் இவரின் ஆசியால் எளிதில் கை கூடி வரும் என்பது காலகாலமாக நம்பப்பட்டு வரும் நம்பிக்கை. கொங்கணர் எழுதிய பல நூல்களில் முக்கியமானவை கொங்கணர் கடைக்காண்டம், ஞானம், குளிகை, திரிகாண்டம் ஆகியவை தான். கொங்கணர் தன் வாழ்வின் இறுதி காலத்தில் ஏழுமலையான் குடியிருக்கும் திருப்பதிக்குச் சென்றார். அங்கே அப்போது வலவேந்திரன் என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவனுக்கு தவம் என்றால் கடமை என்பது பற்றி விளக்கினார். இது அவனுக்குப் பிடித்துப் போகவே, அவரது சீடன் ஆனான்.
அங்கேயே சிலகாலம் தங்கியிருந்து பல நூல்களையும் எழுதிய கொங்கணர் திருப்பதி திருமலையின் கோயில் குளத்தின் தெற்குப் பகுதியில், எட்டாம் படிக்கட்டில் அடக்கமாகி இருக்கிறார். அங்கே செல்பவர்கள் கொங்கணர் ஏற்படுத்தும் அதிர்வுகளை இன்றும் உணர முடியும் என்று ஆன்மீக அன்பர்கள் சொக்கிறார்கள். தன் எழுத்து சொல் செயல் மூலமாக 800 ஆண்டுகள் 16 நாள்கள் இந்த உலகில் பூத உடலோடு வாழ்ந்து பல்லாயிரம் மக்களுக்கு பல அற்புதங்களை செய்த கொங்கணர் கொடுப்பது எல்லாம் நலமே ஆகவே அவரை மனதார நம்பி வணங்குவோம் எல்லையில்லா நன்மைகள் பெறுவோம்.














