மெக்ஸிகோ தூதரகத்தில் ஈகுவடார் போலீசார் அத்துமீறி உள்ளே நுழைந்து அங்கே தஞ்சமடைந்திருந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் கிளாசை கைது செய்தனர்.
ஈகுவடாரின் கீட்டோ நகரில் மெக்சிகோ தூதரகம் உள்ளது. இங்கு ஈகுவடார் போலீசார் அத்துமீறி உள்ளே நுழைந்து அங்கே தஞ்சம் அடைந்திருந்த அரசியல் தலைவர் முன்னாள் அதிபர் ஜார்ஜ் கிளாசை கைது செய்தனர். இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனை அடுத்து தூதரக உறவுகளை மெக்சிகோ முறித்துக் கொண்டது. இந்த சம்பவத்தின் போது தூதரகத்தில் பணிபுரிந்த மெக்சிகோ ஊழியர்கள் காயம் அடைந்தனர். இது குறித்து மெக்சிகோ கூறுகையில் மெக்சிகோ தூதரகத்தில் புகுந்து ஜார்ஜ் கிளாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இது சர்வாதிகார நடவடிக்கையாகும். இது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று கூறி ஈகுவடாருடனான தூதரக உறவுகளை முறித்து பதில் நடவடிக்கை எடுத்துள்ளது. அதே நேரத்தில் எங்கள் நாடு இறையாண்மைமிக்கது. இங்கு குற்றவாளிகள் சுதந்திரமாக இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ஈகுவடார் விளக்கம் அளித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்க நாடுகள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் உறுப்பு நாடுகளான மெக்சிகோவும், ஈக்குவடாரும் சர்வதேச சட்டங்களுக்கு இணங்க வேண்டும். உள்நாட்டு விதிமுறைகளை பயன்படுத்தி இதிலிருந்து விலகுதல் கூடாது என்று கூறியுள்ளது.