இங்கிலாந்தில் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தகத்துறை ஆகியவை இணைந்து இந்தியா-இங்கிலாந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படித்த இந்திய மாணவர்களின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அதோடு இருநாடுகளிலும் கல்வி, அரசியல், பொருளாதாரம் போன்ற பல துறைகளில் சிறப்பான பங்களிப்பு செய்வோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியல் வாழ்வில் ஆற்றிய பங்களிப்பிற்காக மன்மோகன் சிங்குக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்பட்ட இந்த விருது தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தால் விரைவில் டெல்லியில் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.