பிலிப்பைன்சில் 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுல்தான் கூடாரத் என்னும் மாகாணத்தில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 10.13 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியுள்ளது என்று பிலிப்பைன்ஸ் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் கடலோர நகரமான பாலிமங்கில் இருந்து தென்மேற்கு திசையில் 133 கிலோமீட்டர் தொலைவில் 722 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டொபாவ, டாவோ ஓரியண்டல், சாராணி, டபாகோ ஆக்சிடென்ட்ல், தாவோ டெல் நோடே போன்ற இடங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. அதன் காரணமாக மக்கள் அஞ்சி சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதில் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.