கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், இந்தியாவில் உள்ள முதன்மை துறைமுகங்கள் 79.5 கோடி டன் அளவில் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளன. மும்பை, மர்மகோவா, கொச்சி, சென்னை, தூத்துக்குடி, எண்ணூர், விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட 12 துறைமுகங்கள் முதன்மை பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பிக்கி தொழிலக கூட்டமைப்பு சார்பில், டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் இந்த தகவல்களை தெரிவித்தார்.
2023 ஆம் நிதியாண்டில், இந்திய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.4% உயர்ந்துள்ளதாக அமைச்சர் கூறினார். குறிப்பாக, முதன்மை துறைமுகங்களில், 17239 டன் அளவில் ஒரு நாள் சரக்கு கையாளுதல் பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 6% உயர்வாகும். மேலும், கடந்த நிதியாண்டில் 21846 எண்ணிக்கையிலான கப்பல்களை இந்தியாவின் முதன்மை துறைமுகங்கள் கையாண்டு சாதனை படைத்துள்ளதாக கூறினார்.