காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்றுள்ளார்.
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்று கொண்டார். தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் கமிட்டி தலைவர் மிஸ்திரி சான்றிதழ் வழங்கினார். பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். நாடு முழுவதும் மாநில தலைமையகத்தில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குபதிவு நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில், காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி தலைமையில் நடைபெற்றது.
மொத்தம் பதிவான வாக்குகளில் மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகளும், சசிதரூர் 1,072 ஓட்டுகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். காந்தி குடும்பத்தினர் அல்லாத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
.