பிரபல இணைய வர்த்தகத் தளமான 'மீஷோ'வில், செப்டம்பர் 23ஆம் தேதியிலிருந்து 27ஆம் தேதி வரை 'Meesho Mega Blockbuster Sale' என்ற பெயரில் விழாக்கால விற்பனை நடைபெற்றது. இது தொடர்பாக நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நிறுவனத்தின் விற்பனை 68% உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாக்கால விற்பனை நடைபெற்ற 5 நாட்களில், 3.34 கோடி ஆர்டர்கள் பதிவானதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற விழாக்கால விற்பனையில், பெரும்பாலான விற்பனை சிறிய நகரங்களில் இருந்து வந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, 60% விற்பனை முதல் முறையாக இணைய வர்த்தகம் செய்யும் வாடிக்கையாளர்களால் நிகழ்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தின் உனா, ஆந்திர பிரதேசத்தின் சிம்மாகூர்த்தி, மேற்கு வங்கத்தின் கலிம்பாங், குஜராத்தின் பருச், லே லடாக் போன்ற சிறிய நகரங்களில் இருந்து முதல் முறை விற்பனை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய 'மீஷோ' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விதித் ஆத்ரேயா, "இந்த விழாக்கால விற்பனையில், சிறு நகர மற்றும் நடுத்தரத்திற்கும் கீழே உள்ள வாடிக்கையாளர்களின் விற்பனை குறித்து பரிசோதித்தோம். அதில், 80% விற்பனை, இரண்டாம் தர நகரங்கள் மற்றும் அதைவிட சிறிய நகரங்களில் இருந்து நிகழ்ந்தன" என்று கூறினார். மேலும், "இந்தியாவில், இணைய வர்த்தகம் இதுவரை நுழைந்திடாத இடங்களுக்கு எங்கள் வர்த்தகத்தைக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்றார். அத்துடன், சிறிய நகரங்களில் இருந்து ஏற்பட்டுள்ள இந்த விற்பனை உயர்வு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த ஆண்டு நடைபெற்ற விழாக்கால விற்பனையில், சமையல் உபகரணங்கள் விற்பனை முன்னிலை வகிக்கிறது. அடுத்த நிலையில் ஒப்பனை பொருட்கள் மற்றும் பயண உபகரணங்கள் போன்றவற்றின் விற்பனை உள்ளது. சமையல் உபகரணங்கள் விற்பனை 116 சதவீதமும், ஒப்பனை பொருட்கள் விற்பனை 109 சதவீதமும், பயண உபகரணங்கள் விற்பனை 99 சதவீதமும் அதிகரித்துள்ளது.
'மீஷோ' நிறுவணம், கமிஷன் இல்லா விற்பனை உத்தியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலமாக, சிறு, குறு மற்றும் நடுத்தர விற்பனையாளர்கள் பெரிதும் பயனடைந்தனர். குறிப்பாக, 'மீஷோ' வில் விற்பனை செய்வதால், சுமார் 104 கோடி ரூபாய் மதிப்பில், கமிஷன் பணம் சேமிக்கப்பட்டுள்ளதாக, விற்பனையாளர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்த தளத்திலிருந்து வாடிக்கையாளர் விற்பனையும் அதிகரித்தது. தற்போது, நிறுவனத்தின் சார்பில், அக்டோபர் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தீபாவளி விழாக்கால விற்பனை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.