ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் உற்பத்தியாளரான மெர்சிடிஸ் பென்ஸ், இந்திய விற்பனையில் முன்னேற்றம் கண்டுள்ளது. புதன்கிழமை அன்று நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விற்பனை 28% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையில், இதுவரை 11,469 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. இது 2021 ஆம் ஆண்டின் மொத்த விற்பனையை விட அதிகமாகும். கடந்த 2021 ஆம் ஆண்டில் மொத்தமாக 11,242 வாகனங்கள் விற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2021 ஆம் ஆண்டில், ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் வெறும் 8958 வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டன.
இது குறித்து பேசிய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர் - மார்ட்டின் சுவிங்க், “நடப்பு ஆண்டில், கொரோனாவுக்கு முந்தைய விற்பனை விகிதத்தை நிறுவனம் எட்டியுள்ளது. ஆண்டின் முதல் 9 மாதங்களிலேயே காணப்படும் இந்த விற்பனை வளர்ச்சியால், நாங்கள், இந்த வருடம், இந்திய விற்பனையில் புதிய உச்சத்தை அடைவோம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது” எனக் கூறினார். மேலும், “விநியோகச் சங்கிலி இடர்பாடுகள் உள்ளிட்ட பல தடைகளைக் கடந்து இந்த விற்பனை உயர்வு பதிவாகியுள்ளது. எனவே, இனி வரும் விழா காலத்திலும் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது” எனக் கூறினார்.
நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: “மெர்சிடஸ் பென்ஸ் கார்களுக்கான முன்பதிவு செப்டம்பர் மாதத்தில் 7000 எண்ணிக்கையை தாண்டியுள்ளது. குறிப்பாக, நிறுவனத்தின் உயர் ரக வாகனங்களான GLS Maybach 600, Maybach S-Class போன்றவற்றுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், long wheel-base E-Class மாடல், அதிகம் விற்கப்பட்ட மாடலாக உள்ளது. அத்துடன், நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் செடான் வகை வாகனமான EQS 580 -ன் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கான புதிய முன்பதிவுகள் 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.