ட்விட்டர் தளத்தைப் போலவே, எழுத்து பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு, மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் என்ற செயலியை இன்று அறிமுகம் செய்துள்ளது. இது பொதுமக்கள் இடையே மிகவும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயலி அறிமுகமாகி 4 மணி நேரத்திற்குள், 50 லட்சம் பேர் இந்த செயலியை பயன்படுத்தி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுவரை, ட்விட்டருக்கு போட்டியாக பல்வேறு செயலிகள் வெளிவந்தாலும், த்ரெட்ஸ் செயலி ட்விட்டருக்கு நேரடி சவாலாக அமைந்துள்ளது. மேலும், இந்த செயலி இன்ஸ்டாகிராம் கணக்கின் உள் நுழைவு மற்றும் கடவுச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால், அதிக பயனர்களை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.
த்ரெட்ஸ் செயலியில், 500 எழுத்துக்கள் கொண்ட பதிவுகளை பதிவு செய்ய முடியும். இது தவிர, 5 நிமிடம் வரையிலான வீடியோ பதிவுகளையும் பதிவிட முடியும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், புகைப்படங்களையும் பதிவிடலாம். ட்விட்டர் செயலியில், ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு மட்டுமே பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், த்ரெட்ஸ் நிச்சயமாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இது ட்விட்டருக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில், மார்க் ஜூக்கர்பர்க், ட்விட்டரில் ‘ஸ்பைடர் மேன் மீம்’ பகிர்ந்துள்ளது இன்றைய இணைய உலகை ஆக்கிரமித்துள்ளது. மேலும், த்ரெட்ஸ் லோகோ தமிழ், மலையாள எழுத்துக்கள் போல உள்ளதும் பேசுபொருள் ஆகியுள்ளது.