அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராக உள்ளார். இந்நிலையில், வரப்போகும் தேர்தலில் அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஆனால் ட்ரம்ப் மீது பல வழக்குகள் இருக்கிறது. எனவே அவர் தேர்தலில் களம் இறங்குவது கடினமாகவே உள்ளது. இதனால் அவருக்கு அடுத்தபடியாக கட்சியில் உள்ள தலைவர்கள் ஆர்வமுடன் போட்டியிட முயல்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் நாடு முழுவதும் ஆர்வத்துடன் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி முன்னிலையில் உள்ளார். அதோடு குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தேர்தலில் போட்டியிட முன்னதாக விருப்பம் தெரிவித்திருந்தார். அவர் தீவிர பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியரசு கட்சி சார்பாக யூதர்களுக்கான கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது, பல உரையாடல்கள் மற்றும் சந்திப்புகளுக்கு பிறகு நான் இந்த அதிபர் போட்டியில் இருந்து விலக முடிவு செய்துளேன். இது மிகவும் சவாலான போட்டி என்பதை நான் முன்பே அறிந்திருந்தேன். இந்த போட்டியில் இருந்து விலகுவதால் எனக்கு வருத்தம் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் அறிவித்துள்ளார். இதற்கிடையே இவருக்கு போதுமான மக்கள் ஆதரவு இல்லாததாலும் நிதி பற்றாக்குறையினாலும் இவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.