சென்னை ஆவின் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி நந்தனம் ஆவின் தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது மாநில தலைவர் கே. முகமது அலி கூறுகையில், தமிழக அரசு கடந்த 2019ம் ஆண்டிற்குப் பிறகு பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை. பாலுக்கு 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி அறிவிக்க கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக பலகட்ட போராட்டங்களை நடத்தினோம்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் 1 லிட்டருக்கு ரூ.3 மட்டும் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளோம் என்று அவர் கூறினார்.