தமிழகத்தில் அமைச்சர்கள் இலாகா மாற்றம் குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் 13-ம் தேதி இரவு கைது செய்தது. இந்நிலையில், மின்துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை, வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியிடமும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கவர்னருக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் இந்த பரிந்துரையில் சில விளக்கங்கள் கேட்டு திருப்பி அனுப்பினார்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடிதத்தை திருப்பி அனுப்பியது அரசியல் சட்டத்துக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது. அமைச்சர்களின் இலாகாக்களை பிரித்துக் கொடுக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் அரசமைப்பு சட்டத்தை பின்பற்றியே தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து ஆளுநரிடமிருந்து துறைகள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகாவிட்டால், முதல்-அமைச்சரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசு சார்பாக அரசாணை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.














