கேட்பரி சாக்லேட் நிறுவனத்தின் உரிமையாளரான மண்டலஸ் நிறுவனம், வரும் 2026 ஆம் ஆண்டுக்குள், கிட்டத்தட்ட 4000 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த முதலீடுகள் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. உற்பத்தி நிலையங்களின் விரிவாக்கம், சேமிப்பு கிடங்குகளை அதிகரிப்பது, குளிர்பதன பெட்டிகள் அமைப்பது மற்றும் தளவாடங்கள் ஆகியவை சார்ந்து முதலீடுகள் பிரித்து வழங்கப்பட உள்ளன.
இது குறித்து பேசிய மண்டலஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக அதிகாரி தீபக் ஐயர், “மண்டலஸ் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில், எங்கள் வர்த்தகம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஆந்திர பிரதேச அரசுடன் இணைந்து, 1500 கோடி முதலீட்டில் மூன்றாண்டு கால திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த முறை குறிப்பாக கிராமப்புறங்களை சென்றடையும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.














