உலகிலேயே முதல் முறையாக ஆண்ட்ராய்டு கைபேசிகளில் சாட்டிலைட் வசதியை கொண்டு வர மோட்டோரோலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது, எஸ் ஓ எஸ் எனப்படும் சாட்டிலைட் வசதி ஐஓஎஸ் இயங்குதளத்தில் செயல்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மோட்டோரோலாவின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மோட்டோரோலா நிறுவனம், புல்லிட் என்ற செயற்கைக்கோள் இணைப்பு சார்ந்த தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து, இந்தத் திட்டத்திற்காக பணியாற்றி வருகிறது. மோட்டோரோலாவின் டெஃபி ரக்ட் 5ஜி ஸ்மார்ட் போனில் இந்த வசதி முதன் முதலாக அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்த, பயனாளர்கள் புல்லிட் சாட்டிலைட் மெசஞ்சர் என்ற செயலியை தரவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலி மூலம், இணைய வசதி இல்லாமல் குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும். படிப்படியாக, புகைப்படங்கள், ஆடியோ மற்றும் வீடியோ போன்றவற்றை அனுப்பும் வசதி கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.