உலக அளவில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை 25-ம் இடத்தில் உள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ஹென்லி & பார்ட்னர்ஸ் முதலீட்டு நிறுவனம், உலக அளவில் கோடீஸ்வரர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், 10 லட்சம் டாலருக்கு (ரூ.8 கோடி) மேல் சொத்து மதிப்பைக் கொண்டவர்களின் எண்ணிக்கையில் நியூயார்க் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 3.45 லட்சம் பேர் 10 லட்சம் டாலருக்கு மேல் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர். 2வது இடத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ, 3-வது இடத்தில் சான் பிரான்சிஸ்கோ, 4-வது இடத்தில் லண்டன், 5-வது இடத்தில் சிங்கப்பூர் இடம் பெற்றுள்ளன.
மும்பை நகரில் 60,600 பேர் 10 லட்சம் டாலருக்கு மேலாகவும், 243 பேர் 10 கோடி டாலருக்கு (ரூ.800 கோடி) மேலாகவும், 30 பேர் 100 கோடி டாலருக்கு (ரூ.8,000 கோடி) மேலாகவும் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர். இந்தப் பட்டியலில் மும்பை 25-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவின் மோசமான சூழல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாண்டு பெரும் கோடீஸ்வரர்களில் 8,000 பேர் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சொந்த நாடு பிடிக்காமல் வெளியேறுபவர்களின் எண்ணிக்கையில் ரஷ்யா, சீனா முதல் 2 இடங்களில் இருப்பதாகவும் ஹென்லி & பார்ட்னர்ஸ் தெரிவித்துள்ளது.