சூரியனை ஆய்வு செய்வதற்காக பார்க்கர் என்ற விண்கலத்தை அமெரிக்க விண்வெளி மையமான நாசா அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் தற்போது வெற்றிகரமாக சூரியனைச் சுற்றி 16 வது முறை வலம் வந்துள்ளது. மேலும், கடந்த ஜூன் 22 ஆம் தேதி, சூரியனுக்கு மிக அருகில் சென்றுள்ளது. கிட்டத்தட்ட சூரியனின் மேற்பரப்பில் இருந்து 8.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவிற்கு விண்கலம் சென்றுள்ளது. மேலும், மணிக்கு 586782 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துள்ளது. விண்கலத்தின் இந்த பயணத்தின் போது, கலத்திற்கு எந்தவித ஆபத்தும் நேரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சூரியனுக்கு நெருக்கமாக சென்ற முதல் விண்கலம் என மனித வரலாற்றில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 12, 2018 ஆம் ஆண்டு, பார்க்கர் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் சூரியனின் வெப்பத்தை தாங்கும் அளவில் வடிவமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 1777 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை, இந்த கலத்தின் கார்பன் பொருள் தாங்கும் என கூறப்பட்டது. அதனை உண்மையாக்கும் வகையில் தற்போதைய பார்க்கர் விண்கல சாதனை அமைந்துள்ளதால், நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பார்க்கர் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் செல்லும் காணொளியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.