நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள பூமியைப் போன்ற கிரகம் ஒன்றை முதல் முறையாக கண்டறிந்துள்ளது.
LHS 475 b என்ற பெயரில் அறியப்படும் இந்த புதிய கிரகம், அச்சு அசலாக பூமியின் அளவை ஒத்ததாக இருக்கிறது. இது பூமியிலிருந்து 41 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஆக்டன்ஸ் விண்மீன் கூட்டத்திற்குள் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வலம் வருகிறது. அத்துடன், இந்த கிரகம் பாறைகளால் ஆனது என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த கிரகத்தில் குடியேறுவதற்கான சாத்திய கூறுகள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு ஜேம்ஸ் வெப் மூலம் புதிய கதவு திறக்கப்பட்டுள்ளதாக நாசாவின் அஸ்ட்ரோ பிசிக்ஸ் பிரிவு நிர்வாகி மார்க் க்ளம்பின் தெரிவித்துள்ளார்.
புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் கிரகங்களின் வளிமண்டல அமைப்பு குறித்தும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிய வல்லது என்பதால், இந்த கிரகம் குறித்த ஆராய்ச்சி மேலும் விரிவாக்கப்படும் என தெரிகிறது. தற்போதைய நிலையில், ஜேம்ஸ் வெப் அளித்த தகவல்களின் அடிப்படையில், இந்த புதிய கிரகம் பூமியை விட சில நூறு டிகிரிகள் வெப்பமாக உள்ளது.