இந்திய கடற்படையின் 6வது மற்றும் இறுதி கல்வாரி நீர்மூழ்கி கப்பலாக வக்ஷீர் உள்ளது. இந்த கப்பல் இன்று தனது கடல் பயண சோதனையை தொடங்கியுள்ளது. அடுத்த வருடம் இது கடற்படையில் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல், ப்ராஜெக்ட் 75 திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வக்ஷீர் நீர் மூழ்கி கப்பல், மும்பையில் உள்ள Mazagon Dock Shipbuilders Limited நிறுவனம் மற்றும் பிரான்ஸ் கடற்படை இடையிலான கூட்டு திட்டத்தில் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே, 5 கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட பிறகு, இந்த 6வது நீர்மூழ்கிக் கப்பலின் கடல் பயண சோதனை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்தியில், "தற்சார்பு இந்தியா திட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக இது உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.














