மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மையங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு மூலமாக மருத்துவ படிப்புக்கான மாணவர்களின் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு இளநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு வருகிற மே ஐந்தாம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி முதல் ஏப்ரல் பத்தாம் தேதி வரை நடைபெற்றது. இதற்கு 23 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் தமிழ், ஆங்கிலம் உட்பட்ட 13 மொழிகளில் நுழைவு தேர்வு நடத்தப்பட உள்ளது. தற்போது மாணவர்களின் கடைசி நேர பதற்றங்களை தவிர்க்கும் வகையில் தேர்வு மையம், இடம், நகரம் குறித்த விவரங்களை தேர்வு முகமை ஆணையம் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் இதன் விவரங்களை www.neet.nta.nic.in என்ற இணைய தளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவேற்றம் செய்து அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் என தேசிய தேர்வுகள் முகமை ஆணையம் தெரிவித்துள்ளது.