பாகிஸ்தான் எல்லையில் புதிதாக அமைய உள்ள விமான தளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தீசா என்ற இடத்தில் அமையும் விமான படை தளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், இது புதிய இந்தியாவின் துவக்கமாக அமைந்துள்ளது. இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்ற கண்காட்சியாகவும், அதில் இந்தியாவில் மட்டும் தயாரான தளவாடங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன. இந்தியா- பாக். எல்லையில் அமையும் தீசா விமான படை தளம், நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியமான மையமாக இருக்கும் என்றார்.
கடந்த 2000ம் ஆண்டு நான் முதல்வராக இருந்த போது தீசா விமான தளத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. விமான தளத்துக்கான முக்கியத்துவம் குறித்து ஒன்றிய அரசிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 14 ஆண்டுகள் எதுவும் நடக்கவில்லை. தற்போது அதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும், 411 பாதுகாப்பு சார்ந்த பொருட்கள் இந்தியாவிலேயே கொள்முதல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
விமான தளம் அமைய உள்ள தீசா, பாக். எல்லையில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ளது. குஜராத் தொழிற்சாலை பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பொருளாதார பாதிப்பு ஏற்படும். அதை தடுக்கவும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் உடனடியாக பதிலடி கொடுக்கவும் தீசாவில் புதிய தளம் அமைக்கப்பட உள்ளது என்று பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்தனர்.














