பிரான்ஸில் உள்ள நியூ காலடோனியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு அருகில் நியூ காலடோனியா அமைந்துள்ளது. இது பிரான்ஸ் நாட்டு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மாகாணத்தில் சுமார் 2.7 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நியூ காலடோனியாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்கள் அந்தப் பிரதேசத்தில் நடைபெறும் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது பாரிஸ் நகரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தத்துக்கு அங்குள்ள கணக் பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சட்டத்தால் தங்கள் உரிமைகள் புறக்கணிக்கப்படும் என்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக சாலையில் கூடி கோஷம் எழுப்பினர். அதே சமயம் மற்றொரு பிரிவினர் இந்த சட்ட திருத்தத்திற்கு ஆதரவளித்தனர். இதனால் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் வெடித்து வன்முறையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து பிரான்சுக்கு ஆதரவான கடைகளில் தீ வைக்கப்பட்டது. வாகனங்கள் மற்றும் வீடுகள் கொளுத்தப்பட்டன. இதனால் பல இடங்களில் பதற்றமான சூழல் நிலவியது. உடனடியாக அங்கு எல்லாம் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இந்த கலவரத்தில் ஒரு போலீஸ்காரர் உட்பட கணக் பழங்குடியினர் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலைமையை கட்டுப்படுத்த நியூ காலடோனியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. தலைநகர் நௌமியாவில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற 12-ம் தேதி வரை இந்த அவசரநிலை பிரகடனம் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இரண்டு விமான நிலையங்கள் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.