சென்னை ஐ.ஐ.டி.யில் ஆன்லைன் மூலம் படிக்கும் வகையிலான பி.எஸ். மின்னணு அமைப்பியல் எனப்படும் புதிய பட்டப்படிப்பை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிமுகம் செய்துவைத்தார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எஸ். மின்னணு அமைப்பியல் எனப்படும் புதிய பட்டப்படிப்பு தொடக்கவிழா நேற்று நடந்தது. விழாவில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு புதிய பட்டப்படிப்பை அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், 'புதிய கல்வி கொள்கையின்படி டிஜிட்டல் பல்கலைக்கழகம் நாடு முழுவதும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தேசிய கல்வி கொள்கையில் குறிப்பிடப்பட்ட அனைத்தும் கல்வித்துறையில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மின்னணு அமைப்பியல் என்ற புதிய படிப்பை சென்னை ஐ.ஐ.டி. தொடங்கி இருப்பது பாராட்டுக்குரியது' என்றார்.
பிளஸ்-2 படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பிரிவை தேர்ந்தெடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் இந்த படிப்பில் சேரலாம். ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், ஏற்கனவே வேறொரு படிப்பை கல்லூரி மூலம் படிப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் இதில் சேரலாம். வயது வரம்பு கிடையாது என்று சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.














