மின் வாரிய செலவுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் புதிய மின் கட்டண முறை விரைவில் அமலுக்கு வருகிறது.
மத்திய அரசு புதிய மின்சார திருத்த சட்டத்தை கொண்டு வந்து உள்ளது. அதன்படி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்சார திருத்த சட்ட விதி 14ன் படி, மின் வாரியத்துக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் பொதுமக்களிடம் இருந்து கட்டணத்துடன் வசூலித்துக் கொள்ளலாம் என்று அதிகாரம் அளித்து உள்ளது. இந்த விதி அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மின்வாரிய கூடுதல் செலவுகளையும் பொதுமக்களிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என்று அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய தொழிற்சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், மின்சார வினியோகத்தை டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் தனியாரிடம் கொடுக்க விரைவில் முடிவெடுப்பார்கள். அவ்வாறு தனியாரிடம் செல்லும் போது அவர்கள் செலவினங்களை வசூலிப்பதற்கு ஏற்ப இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மாதந்தோறும் செலவினங்களை வசூலிப்பதை இப்போது நடைமுறைப்படுத்தாவிட்டாலும் விரைவில் இது அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.














