கடந்தகால சவால்களை புதிய இந்தியா விரைவாக வெற்றி கொள்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். உனாவில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயிலையும் அவர் தொடங்கி வைத்தார். இது நாட்டில் அறிமுகம் செய்யப்படும் நான்காவது வந்தே பாரத் ரயில் ஆகும். இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் என்பதால், டெல்லியில் இருந்து இமாச்சலுக்கு மிக விரைவாக பயணம் செய்ய முடியும்.
மேலும், இமாச்சல பிரதேசத்தின் சம்மா மாவட்டத்தில் 2 நீர்மின் நிலைய திட்டங்களுக்கும் பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் ஆண்டுக்கு 270 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஹரோலி என்ற இடத்தில் ரூ.1,900 கோடி செலவில் உருவாக்கப்படும் மருந்து தொழில் பூங்காவுக்கும் பிரதமர் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த மருந்து பூங்கா, முக்கிய மருந்து மூலப் பொருட்களின் இறக்குமதியை குறைக்கும்.
இதையடுத்து, உனாவில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், கடந்த கால சவால்களை எல்லாம், புதிய இந்தியா மிக விரைவாக வெற்றி கொள்கிறது. கரோனா காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் உலகம் முழுவதும் சென்றன. இமாச்சல பிரதேசத்தில் தொடங்கப்படும் மருந்து பூங்கா மூலம், நோயாளிகளுக்கு தரமான மற்றும் மலிவான சிகிச்சை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று அவர் பேசினார்.