திரிகோணமலையில் பாரத ஸ்டேட் வங்கி கிளையை இந்திய நிதி அமைச்சர் நிா்மலா சீதாராமன் திறந்து வைத்தாா்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்நாட்டு அதிபர் ரனில் விக்ரமசிங்கவை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இலங்கையில் மேற்கொள்ளப்படும் 15 மில்லியன் டாலர் மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். இந்த உதவியை இந்திய அரசு செய்கிறது. அதோடு கொட்டக்கலை பகுதியில் மவுண்ட் வெர்னன் தேயிலை தோட்டத்தின் கீழ் பகுதியில் சுமார் 10,000 வீடுகள் கட்டும் திட்டத்திற்கு இந்தியா நிதியுதவி அளிக்க உள்ளது. இதற்கு இருவரும் சேர்ந்து அடிக்கல் நாட்டினர்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான திரிகோணமலையில் பாரத ஸ்டேட் வங்கி கிளையை நிதி அமைச்சர் தொடங்கி வைத்தார். கடந்த 159 ஆண்டுகளாக இலங்கையில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ அந்நாட்டின் மிகப் பழமையான வங்கியாகும். இந்த வங்கி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனது சேவையை அளித்து வருகிறது.