தமிழக அரசின் ஓய்வூதியர்களோ அல்லது அவரது துணைவரோ உயிரோடு இருக்கும் போதே குடும்ப பாதுகாப்பு திட்டத்திற்கான நியமனதாரர்களை நியமிக்கலாம் தமிழக என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் நிதி(ஓய்வூதியம்) துறை சிறப்பு செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரரின் விருப்பத்தின் பேரில், அவரின் ஓய்வூதியத்திலிருந்து சந்தா தொகை பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வூதியர் இறக்கும் நேர்வில் அவர்தம் துணைவருக்கோ அல்லது அவரது துணைவர் உயிரோடு இல்லாத போது ஓய்வூதியர் நியமனம் செய்த நியமனதாரருக்கோ இத்திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த தொகையானது வழங்கப்படும்.
மேலும், துணைவர் உயிரோடு இல்லாமலிருந்தாலோ அல்லது நியமனதாரர் எவரும் நியமிக்கப்படாத நிலையில், ஒட்டுமொத்த தொகையானது மறைந்த ஓய்வூதியரின் வாரிசுதாரர்களுக்கு சமமாக பிரித்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு ஓய்வூதியதாரர்களின் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், ஓய்வூதியர் இறந்த பின்பு வழங்கப்பட வேண்டிய ஒட்டுமொத்தத் தொகையினை பெறுவதற்குரிய நியமனதாரரை, ஓய்வூதியரோ அல்லது அவரது துணைவரோ இருவரும் உயிரோடு இருக்கும்போதே நியமனம் செய்து கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.