ஓலா நிறுவனம், பெங்களூரு நகரத்தில், சோதனை முயற்சியாக 1000 மின்சார டாக்ஸிகளை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், ஓலா செயலியில் பிரத்தியேகமாக மின்சார வாகனங்களை தேர்ந்தெடுக்கும் அம்சம் கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன், ஒரு வருட காலத்திற்குள், மின்சார டாக்ஸிகளின் எண்ணிக்கையை 10000 ஆக உயர்த்தவும் ஓலா திட்டமிட்டுள்ளது. இந்த சேவைக்காக, ஓலா நிறுவனம், மின்சார கார்களை வாங்கி, அதனை ஓட்டுனர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்க உள்ளது.
ஏற்கனவே, கடந்த 2017ம் ஆண்டு, நாக்பூரில், மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து மின்சார டாக்ஸி சேவையை ஓலா நிறுவனம் தொடங்கியது. ஆனால், இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது, இரண்டாவது முறையாக பெங்களூருவில் இந்த திட்டத்தை ஓலா தொடங்கியுள்ளது. மேலும், ஓலா நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான ஊபர், டெல்லியில் மின்சார டாக்ஸி சேவையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.