கர்நாடக போக்குவரத்து துறை, வியாழக்கிழமை அன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஓலா, ஊபர் மற்றும் ராபிடோ ஆட்டோ சேவைகளைத் தடை செய்வதாக அறிவித்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்குள், இந்த சேவைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சேவைகள் நிறுத்தப்படாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓலா மற்றும் ஊபர் ஆட்டோக்களில், 2 கிலோமீட்டருக்கும் குறைவான பயண தூரத்திற்கு கூட, குறைந்தபட்சத் தொகையாக 100 ரூபாய் வசூல் செய்யப்படுவதாக, பல புகார்கள் குவிந்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, முதல் 2 கிலோமீட்டருக்கு குறைந்தபட்சத் தொகையாக 30 ரூபாய் வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்குப் பிறகான ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 15 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய போக்குவரத்து துறை ஆணையர் டி எச் எம் குமார், “2016 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சட்டதிட்டங்களின் அடிப்படையில், ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களுக்கு டாக்ஸி சேவைகள் வழங்க மட்டுமே உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அந்த உரிமையை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் ஆட்டோக்களை இயக்குவது சட்டவிரோதமாகும். அதனால், அதனை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார். ஆதர்ஷ் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சம்பத் இது குறித்து பேசும்போது, “ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ள கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
ஓலா, ஊபர் போன்ற செயலிகளில், பயணக் கட்டணத்தில் 60% ஆட்டோ ஓட்டுனரின் சம்பளமாகவும், 40% தனியார் நிறுவனத்தின் கமிஷன் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு, வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயணக் கட்டணத்தை தனியார் நிறுவனங்கள் உயர்த்தியதால், 50 முதல் 60% வாடிக்கையாளர்கள் தனியார் ஆட்டோ சேவை பயன்படுத்துவதை நிறுத்தி உள்ளனர். எனவே, தனியார் செயலிகளை சார்ந்து இயங்கும் நிலையை ஆட்டோ ஓட்டுனர்கள் களைய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில், நவம்பர் ஒன்றாம் தேதி முதல், “நம்ம யாத்ரி” என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த செயலியில், அரசு நிர்ணயித்துள்ள பயணக் கட்டணத்துடன் கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், 2 கிலோமீட்டர் தொலைவிலான பயண தூரத்திற்கு, குறைந்தபட்ச கட்டணமாக 40 ரூபாய் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.














