எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவையில் இருந்து இன்று ஒரு நாள் வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் தொடங்கியது. பேரவை தொடங்குவதற்கு முன்பே ஓ.பன்னீர்செல்வம் இருக்கையில் வந்து அமர்ந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, துணைத் தலைவர் பன்னீர்செல்வம் அடுத்தடுத்து இருக்கைகளில் அமர்ந்துள்ளனர். முன்னதாக எதிர்க்கட்சி துணைத்தலைவரை மாற்றக்கோரி எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதங்கள் நிலை குறித்து எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார்.
மக்கள் பிரச்சனையை பேசவேண்டிய கேள்வி நேரத்தில் இடையூறு செய்யாதீர்கள் என சபாநாயகர் அப்பாவு கூறினார். இதனை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அமளியில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை விதிகளை மீறவேண்டாம் என்றும் சட்டப்பேரவை விதிகளை மீறுபவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் கூறினார்.
தொடர்ந்து பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.க்களை அவை காவலர்களை கொண்டு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் பங்கேற்க ஒருநாள் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.