சபரிமலை ஐயப்பன் கோவிலில் சீசன் காலங்களில் இனி ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு எப்போதும் கூட்டமாக காணப்படுவதால் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையில் சபரிமலையில் உடனடி தரிசனம் முன்பதிவு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதனால் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனில் கட்டுக்கடங்காத பக்தர்களின் கூட்டம் உண்டானது. மேலும் 15 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனால் பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் திரண்டதால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக விவாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உடனடி தரிசனம் முன்பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சீசன் காலங்களில் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.