ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் இருசக்கர வாகன விற்பனையகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், அங்கிருந்த 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.
விற்பனையகத்தின் முதல் தளத்தில் மின்சார வாகனங்களும், தரைதளத்தில் பெட்ரோல் வாகனங்களும் இருந்தன. விற்பனையகத்துடன் சேர்த்து, வாகன சர்வீஸ் சென்டரும் இயங்கி வருகிறது. இந்த நிலையில், மின்சார வாகனம் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டு, அந்த தீ மற்ற வாகனங்களுக்கும் பரவியுள்ளது. வளாகத்திற்குள் 1000 வாகனங்கள் வரை இருந்துள்ளன. தீ விபத்து குறித்த தகவல் தீயணைப்பு துறைக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அனைத்துள்ளனர். ஆனால், அதற்குள்ளாக, 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.