இந்திய ராணுவத்தில், 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு சம்பளம் வழங்க வங்கிகளுடன் ராணுவம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ராணுவத்தில் அக்னிபத் என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 17 வயது முதல் 23 வயது வரையிலான இளைஞர்களை முப்படைகளிலும் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பயிற்சி ஜனவரியில் துவங்குகிறது. இந்திய முப்படைகளில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் மட்டும் பணியாற்றலாம். இத்திட்டத்தை ஜூன் மாதம் மத்திய அரசு அறிவித்தது.
இதில், முதலாம் ஆண்டில் வீரர்களின் சம்பளம் மாதம் 30 ஆயிரம் ரூபாய்; நான்காம் ஆண்டின் முடிவில் 40 ஆயிரம் ரூபாயாக இருக்கும். எனவே, வீரர்களுக்கு வங்கி வாயிலாக சம்பளம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாரத ஸ்டேட் பாங்க், நேஷனல் பாங்க், பாங்க் ஆப் பரோடா, ஐ.டி.பி.ஐ., - ஐ.சி.ஐ.சி.ஐ., - ஹெச்.டி.எப்.சி., ஆக்சிஸ் உள்ளிட்ட வங்கிகளுடன் ராணுவம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பன்சி போனப்பா தலைமையில் லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீஹரி மற்றும் வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.