பாகிஸ்தானில் 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் அனைவருமே முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக்-ஏ-இன்சாப் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதத்தில், இம்ரான் கான் மீது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் பதவி விலகினார். அவரோடு இணைந்து, அவரது கூட்டணி கட்சிகளை சேர்ந்த 123 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இந்நிலையில், 35 எம்பிக்கள் தற்போது ராஜினாமாவை அறிவித்துள்ளனர். முன்னதாக, இவர்களது ராஜினாமாவை ஏற்க மறுத்து வந்த பாகிஸ்தான் அவைத் தலைவர் ராஜா பர்வேஸ் அஷ்ரப், தற்போது ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை விரைவில் நடத்த வலியுறுத்தி வருகிறார். அவரது திட்டப்படியே இந்த ‘கூண்டோடு ராஜினாமா’ நிகழ்வதாக கூறப்படுகிறது.














