பெருநாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ நீக்கப்பட்டார். அந்த நாட்டின் முதல் பெண் அதிபராக டினா பதவி ஏற்றார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், இடதுசாரியான பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி அதிபர் ஆனார். அவர் மீது சமீப காலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் வலுத்து வந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிரடியாக அதிபர் பெட்ரோ காஸ்டிலோ, அந்த நாட்டின் டெலிவிஷனில் தோன்றிப் பேசினார். நாட்டில் அவர் அவசர நிலையை அமல்படுத்துவதாக அறிவித்தார். நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த அரசை ஏற்படுத்தப்போவதாகவும் அறிவித்தார். இந்த முடிவை எதிர்த்து மந்திரிகள் பலரும் பதவியை ராஜினாமா செய்தனர்.
ஆனால் எதிர்க்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நாட்டின் நாடாளுமன்றம் அவசரமாகக்கூடி அவருக்கு எதிராக 'இம்பீச்மெண்ட்' நடவடிக்கை எடுத்தது. அவரது பதவியைப் பறிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 101 ஓட்டுகள் விழுந்தன. எதிராக 6 வாக்குகள் கிடைத்தன. 10 பேர் ஓட்டெடுப்பை புறக்கணித்தனர். 'இம்பீச்மெண்ட்' நடவடிக்கைக்கு ஆதரவாக பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஓட்டு போட்டதால் அதிபர் பதவி இழந்தார். அடுத்த சில நிமிடங்களில் அவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து துணை அதிபராக இருந்து வந்த பெண் தலைவர் டினா பொலுவார்டே அதிபர் பதவி ஏற்றார். 60 வயதான இவர் வக்கீல் ஆவார். அவர் 2026-ம் ஆண்டு வரை அதிபர் பதவி வகிக்கப்போவதாக தெரிவித்தார்.














