போக்குவரத்து விதிமீறலுக்காக அபராத தொகையை உயர்த்தியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சாலை விபத்துக்கு மோசமான சாலை, போக்குவரத்து நெரிசல், இயந்திர கோளாறு, கவனக்குறைவாக ஓட்டுதல், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல் என பல காரணங்கள் உள்ளன. தலைக்கவசம் அணிவதால், உயிரிழப்புகள் குறைகின்றன என்பதால், கட்டாயமாக அதை அணியும்படி, அரசு உத்தரவிட்டது. தலைக்கவசம் கட்டாயம் அணிவதை, 2015 முதல் அரசு வற்புறுத்தி வருகிறது.
தற்போது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராத தொகையை அரசு உயர்த்தி உள்ளது. தலைக்கவசம் அணியவில்லை என்றால் 1,000 ரூபாயாக அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.
வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் அபராதம் விதிப்பது சட்டவிரோதமானது. இதனால், சாதாரண மக்கள் பாதிக்கப்படுவர். எனவே 2022 அக்.,19ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை உத்தரவை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை தொடர்ந்து விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.














