டிஜிட்டல் பரிவர்த்தனை தளமான போன் பே, சர்வதேச தனியார் நிதி நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்திடம் இருந்து 350 மில்லியன் டாலர்கள் நிதியை பெற்றுள்ளது. இதன் மூலம், 12 பில்லியன் டாலர்கள் மதிப்பில் போன் பேயின் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 2020 டிசம்பரில், 5.5 பில்லியன் டாலர்களாக போன் பே மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்தியாவின் மதிப்பு மிக்க தனியார் நிதி நிறுவனமாக போன் பே உருவெடுத்துள்ளது. இதன் போட்டியாளரான ரேசர் பேயின் மதிப்பு 7.5 பில்லியனாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஜனவரி மாதத்தில், 1 பில்லியன் டாலர்கள் வரை நிதி முதலீடு ஏற்பட வாய்ப்புள்ளதாக போன் பே தெரிவித்துள்ளது. இதில் பல்வேறு முதலீட்டு நிறுவனங்கள் பங்கு பெறுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிதி மூலம், முழுமையாக ஃபிளிப்கார்ட் குடும்பத்திலிருந்து போன் பே வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய நிறுவனத்தின் தனிமை அதிகாரி சமீர் நிகாம், "இந்த நிதி மூலம், காப்பீடு, நிதி மேலாண்மை மற்றும் கடன் வழங்கல் துறைகளில் நிறுவனம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது" என்று கூறினார்.